Tuesday, 21 April 2020

சம்பள உயர்வு.


ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது. மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது.

அதற்கு வியாபாரி, “மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்துக் கொண்டது. புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான். கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது. அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது. மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது.

மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான். “எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது. வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை. உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான். வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. “எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்ததாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.

அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்” என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது.


நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் ......

வசதி



அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது.. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக் கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி கேட்டது. “எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை. இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்ன வர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது. முடிவாக, அதோ.... கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது. வந்து விட்டோம்..... வந்தே விட்டோம்...... இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம். குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால், இதென்ன.... ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக் கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது. மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது. குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.

“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள் வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக் கிறோம். குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம். கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."💐

!!**வாழ்க்கையின் உண்மை**!!



ஞானி ஒருவர் கோயில் ஒன்றில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இடையே நகைச்சுவை ஒன்றைச் சொன்னார். கூட்டத்தில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதே நகைச்சுவையை மறுபடியும் சொன்னார். இம்முறை கொஞ்சம் பேர் மட்டும் சிரித்தனர். அதே நகைச்சுவையை இடையிடையே சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் யாருமே சிரிக்காமல் அமைதியாய் இருந்தனர். ஞானி சொன்னார், திரும்பத் திரும்ப கேட்ட ஒரு நகைச்சுவைக்கே சிரிக்க முடியாத உங்களால், என்றோ நடந்து முடிந்த துயர சம்பவங்களை மட்டும் நினைத்து, எப்படி திரும்பத் திரும்ப அழ முடிகிறது ? ஒரே விஷயத்திற்காக எப்படிப் பல காலம் பகையும் வன்மமும் கொள்ள முடிகிறது?

"அந்த இடமே ஆழ்ந்த அமைதியானது"..


மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!


ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள் , அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை.

வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். "பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார். வெளியில் நின்றிருந்த தன் காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் தன் மகன் கீரிய அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்

” ஐ லவ் யூ அப்பா”.

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்?

பெண்.


ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்*.

ஒரு நாள், இரு நாள் அல்ல, தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்.இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள்,
ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும், கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.

ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள். ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது, …… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.

கோபத்தின் கதை!


ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.

”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.

முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம்ம்🏼 கூறினான்.இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்ன்🏽.உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்?

உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா?

இது தான் உலகம்!


ஒரு பள்ளி ஆசிரியை கரும்பலகையில் கீழ் கண்டவாறு எழுதினார்

9×1=7
9×2=18
9×3=27
9×4=36
9×5=45
9×6=54
9×7=63
9×8=72
9×9=81
9×10=90

இதை எழுதி முடித்தவுடன், மாணவர்கள் அனைவரும் சிரித்து கேலி செய்தனர். காரணம் கேட்ட போது, ஆசிரியை எழுதிய முதல் வாக்கியம் தவறு என்று சொன்னார்கள்.

ஆசிரியை மாணவர்களை நோக்கி உண்மைதான், அது தவறுதான் ஆனாலும் ஒரு காரணத்திற்காக நான் அப்படி செய்தேன், ஏனெனில் நான் மற்ற வாக்கியங்கள் எல்லாம் எழுதியிருந்தாலும் அதற்காக நீங்கள் என்னை பாராட்டவில்லை ஒரு தவறான செயலுக்கு கேலி செய்கிறீர்கள் அல்லவா இது தான் உலகம். நீங்கள் நல்லது எவ்வளவு செய்தாலும் ஒரு தவறில் எல்லாம் முடிந்துவிடும்.
ஆக நல்லது செய்வது முக்கியம் என்றால் தவறு செய்யாமல் நல்லது செய்வது அதைவிட முக்கியம்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

நினைப்பு.


அந்த கிராமத்திலே ஒரு கிருஷ்ணன் கோவில். அந்த கோவிலில் கிருஷ்ணஜெயந்தி திருவிழா.
அந்த கிராமத்து மக்கள் எல்லாம் அங்கே கூடி இருந்தாங்க. ஒரு கதை சொல்லற பாகவதர் கிருஷ்ணனின் அருமை பெருமையெல்லாம் கதையா சொல்லி கிட்டு இருந்தார். இந்த சமயம் பார்த்து ஒரு திருடன் ஊருக்குள்ள திருட வந்தான். இந்த ஊர்ல உள்ள அத்தனை பேரும், கோவில்ல இருக்காங்க. நமக்கு நல்ல வேட்டைதான். வீட்டுக்கு வீடு புகுந்து கண்ணுல அகப்பட்டதை சுருட்ட வேண்டியதுதான் அப்படின்னு திட்டம் போட்டு வீடு வீடா புகுந்தான்.

அவன் கெட்ட நேரம் ஒரு வீட்டுல கூட, உருப்படியா ஒன்னும் இல்லை. என்னடா இது.......... இந்த ஊர்ல எல்லா பயலும் பிச்சைகாரனா இருப்பான் போலிருக்கே. அப்படின்னு யோசிச்சு கிட்டே கோவில் பக்கம் வந்தான். அங்கே யாராவது ஒரு ஏமாளி பய சிக்காமலா போய்டுவான் என்பது அவன் எண்ணம். பாகவதர் சுவாரஸ்யமா கிருஷ்ணன் கதையை சொல்லி கிட்டு இருந்தார்.

குழல் ஊதும் கிருஷ்ணன் இருக்கானே.... கொள்ளை அழகு. அவன் கழுத்துல தங்க மாலை போட்டு இருப்பான். இடுப்புல பட்டையா ஒட்டியாணம் மாதிரி வைரம் பதிச்ச பெல்ட் போட்டு இருப்பான். காதுல வைர கடுக்கன். கையில தங்க காப்பு. கால்ல முத்து பதிச்ச தண்டை. அட அட அட .... அப்படியே கண்ணனை பார்க்க கண் கோடி வேண்டும். இப்படி... கண்ணன் அழகை வர்ணிச்சார் பாகவதர். இதை கேட்டான் திருடன். அவனுக்கு கண்ணன் யாருன்னு எல்லாம் தெரியாது. அவனுக்கு தெரிஞ்சது எல்லாம் திருட்டு வேலை மட்டும்தான். அடடா... அந்த பாகவதர் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையனை பற்றி சொல்றார். அவன் யார் வீட்டு பையன்னு கேட்டு, நம் கை வரிசையை கட்ட வேண்டியதுதான். அப்படின்னு கதை முடியுற வரை காத்திருந்தான். கதை முடிஞ்சுது.. ஊர் மக்கள் எல்லாம் போன பிறகு, மெல்ல பாகவதர் பக்கம் வந்தான் திருடன்.

ரொம்ப நேரமா ... ஒரு பையனை பற்றி சொன்னிங்களே அவன் யார். எங்கே இருப்பான். உடனே சொல்லு. இல்லை உன்னை இந்த கத்தியாலேயே குத்தி கொன்னுடுவேன் அப்படின்னு மிரட்டினான். பாகவதருக்கு கை கால் எல்லாம் வெட வெடன்னு ஆரம்பிசுடிச்சு. கடவுளே இது என்ன சோதனை. நான் அந்த மாய கண்ணனை பற்றி அல்லவா கதை சொன்னேன். இந்த முட்டாள் திருடன் அதை உண்மைன்னு நம்பி வந்து கேட்கிறானே. அப்படின்னு யோசித்தவர்... அவனிடம் தப்பிக்க.... அதோ தெரியுதே சோலை, அந்த சோலை பக்கம் தான் அந்த கண்ணன் விளையாட வருவான். போய் பிடிச்சுகோன்னு சொல்லி அப்போதைக்கு தப்பிச்சுட்டார். திருடனை பொறுத்தவரை பாகவதர் சொன்னது உண்மைன்னு நம்பினான். கண்ணன் வருவான் அப்படின்னு சோலைல போய் ஒளிஞ்சு இருந்தான்.

அவன் நினைவு எல்லாம்... கண்ணன் எப்போ வருவான்... கண்ணன் எப்போ வருவான் என்பதாகவே இருந்தது. உண்மையா பாகவதர் சொன்ன மாதிரி கண்ணன் வந்தான். பாகவதர் சொன்ன மாதிரி நகை எல்லாம் போட்டு இருக்கானான்னு திருடன் பார்த்தான். உண்மைதான்... அவர் சொன்ன அத்தனை நகையும் கண்ணன் போட்டு இருந்தான். மெல்ல சின்ன கண்ணன் பக்கம் போய்... அடேய் தம்பி... உன் நகை எல்லாம் அழகா இருக்கு. அதை எனக்கு தருவியான்னு கேட்டான். கண்ணன் உடனே எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டான். நல்ல பையன்னு சொல்லிட்டு திருடன் நகையை எல்லாம் ஒரு மூட்டையா கட்டி எடுத்து கிட்டு பாகவதரை தேடி வந்தான். தன் வீட்டு வாசலில் இருந்த பாகவதர் தூரத்தில் வரும் திருடனை பார்த்துட்டார்.

அவருக்கு மறுபடியும் கை கால் எல்லாம் ஆட அரம்பிசுடிச்சு. திருடன் போய் சோலைல பார்த்திருப்பான். கண்ணன் வந்திருக்க மாட்டான். அந்த கோபத்தோட வருவான். இவன் கிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறது... அவனும் நம்மளை பார்த்துட்டான் .. அப்படின்னு யோசிக்கும் போது, திருடன் பக்கத்துல வந்து ரொம்ப நன்றி... ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல வேட்டைன்னு சொன்னான். பாகவதருக்கு பயம் போயிடிச்சு. என்னப்பா சொல்றேன்னார்.

உண்மைதான்... நீங்க சொன்ன மாதிரி சின்ன கண்ணன் வந்தான். என்ன அழகு. என்ன சிரிப்பு, அவனை அப்படியே பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு. நான் கேட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம அப்படியே கழட்டி கொடுத்துட்டான். இதோ அந்த நகை எல்லாம் இருக்கு. உனக்கு கொஞ்சம் பங்கு தரவான்னு கேட்டான். பாகவதரால நம்பவே முடியலை. என்ன சொல்றேன்னார். அவனை பார்த்தியான்னு கேட்டார். ஆமாம் சாமி. உங்களுக்கு சந்தேகம் இருந்தா என் கூட வாங்க ... அந்த சோலைலதான் இன்னும் விளையாடி கிட்டு இருக்கான். வாங்க கட்டுறேன்னு சொன்னான்.

நம்பவே முடியாம பாகவதர் அவன் கூட போனார். சோலை கிட்டே வந்ததும் அதோ.... பாருங்க... சின்ன கண்ணன்... நீல வண்ணன் விளையாடிகிட்டு இருக்கான் பாருங்கன்னு சொன்னான். பாகவதர் கண்ணுக்கு எதுவுமே தெரியலை. சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டது. இது என்ன சோதனை... என் கண்ணுக்கு தெரியலை... கேவலம் இந்த திருடன் கண்ணுக்கு தெரியுறியா கண்ணானு பாகவதர் அழவே ஆரம்பிச்சுட்டார்.

அப்போ .. அந்த திருடன் கையை பிடிங்கோனு ஒரு குரல் கேட்டது. உடனே அவன் கையை பிடிச்சார். நீல வண்ண கண்ணன் அவர் கண்ணுக்கு தெரிஞ்சார். கண்ணா... இது தர்மமா... என் நினைவு தெரிந்த நாள் முதல் உன் கதையை சொல்றேன். அதை தவிர வேற எதுவுமே எனக்கு தெரியாது. இது வரை எனக்கு தரிசனம் தராத நீ.... இந்த திருடன் கண்ணுக்கு தெரிகிறாய். அவன் கையை பிடித்த பிறகுதான் நீயே எனக்கு தெரிந்தாய்.

பாகவதரே.... உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால்... இத்தனை ஆண்டு காலம் என் கதையை சொன்னாலும், நான் வருவேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததே இல்லை. நான் இருக்கேனா இல்லையா என்பதே உங்களுக்கு சந்தேகம்தான். ஆனால் இந்த திருடன் அப்படி இல்லை. நான் இருக்கேன் என்று நம்பினான். நான் வருவேன் என்று நம்பினான். அவன் என்னையே நினைத்தான் அதனால் வந்தேன். கடவுள் பத்தி என்பதே நம்பிக்கைதான் என்று சொல்லி விட்டு கண்ணன் மறைந்து விட்டான்.

ஆக, தன்னையே நினைந்திருப்போரை எந்தத் தருணத்திலும், எவருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன் பகவான். நாம் என்னவாக நினைக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்கள் தான் அனைத்து மதம் தெய்வங்களும் 

உறுதியாக எதிர்த்து போராடு.


விவேகானந்தர் லண்டனில் உள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டிற்கு சென்று இருந்தார். அங்கு ஒரு நாள் மாலை பண்ணை வீட்டு மைதானத்தில் விவேகானந்தர், அவரது நண்பர், நண்பரின் மனைவி ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதை கண்ட நண்பரின் மனைவி அச்சத்தில் அப்படியே மயங்கி விழுந்து விட்டார். நண்பரும் உயிருக்கு பயந்து ஓடி விட்டார். விவேகானந்தர் மட்டும் அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக தப்பிய நண்பர் ‘சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?’ என்று கேட்டார்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், ‘’நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம்’‘. என்றார். இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ‘நமக்கு தீமை விளைவிக்க கூடிய எந்த சூழ்நிலையிலும் நாம் அதைக்கண்டு அஞ்சி விடாமல் உறுதியாக எதிர்த்து போராட வேண்டும்’ என்பதே..

மறதி...


ஒரு கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்..... ஊருக்கு மத்தியில் இருந்தமரத்தடியில் அமர்திருந்தார்...... யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை. முனிவர் அல்லவா ? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது.வானம் பொய்த்துவிடும் ”
இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர்.. வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.. மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை ).
இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான் …) அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது.. ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டு இருதான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர். மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு.. அவனிடம் கேட்டே விட்டனர்.நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று.. அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம்
’ 50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும்.. அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன் ” என்றான்.
இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார்.. "50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே" என்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார்.. இடி இடித்தது.. மழை பெய்ய ஆரம்பித்தது..

நம்பிக்கை ஜெயித்து விட்டது..
*"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும் ”*

"Self confident never fail"
வெற்றி நிச்சயம் !!!

தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை



காசி அரசனின் ரதம் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான்.எல்லாம் இருந்தும் மனநிம்மதி இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்தான். எளிமையான உடைகளுடன் இருந்த அந்த மனிதரின் முகத்தில் பேரானந்தம் தாண்டவமாடுவதை ஆச்சரியத்துடன் நோக்கினான்.


தனது மரணத்திற்கு முன்பு இந்த மனிதரிடம் ஆசுவாசமாகப் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து ரதத்தை நிறுத்தி இறங்கினான். தனது மூடிய விழிகளைத் திறந்தார் அந்த மாமனிதர். தன் முன் நின்ற மன்னனைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டார். "நான் ஒரு அரசன். எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாத எண்ணமே என்னை வதைத்துக்கொண்டிருக்கிறது. என் பிரச்னையை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் ஒளியுடைய முகம் என்னை ஈர்த்தது. நான் சாவதற்கு முடிவு எடுத்துள்ளேன். என் பிரச்னை என்னவென்று அதற்கு முன்னர் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றான் மன்னன். மன்னன் சொல்வதையேல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த மனிதரின் பார்வை மன்னனின் கால்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. மன்னனுக்குச் சிறு வயது முதலே காலாட்டுகிற பழக்கம் உண்டு. அந்த மனிதர் தன் கால்களைப் பார்க்கிறார் என்பதை அறிந்த மன்னன் சட்டென்று காலாட்டுவதை நிறுத்திவிட்டான். " மன்னனே உனக்கு எவ்வளவு காலமாக காலாட்டுகிற பழக்கம் உள்ளது?" என்று கேட்டார். தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் காலாட்டுவதாக மன்னன் பதில் கூறினான். "இப்போது நீ ஏன் காலாட்டுவதை நிறுத்திவிட்டாய்?" என்று கேட்டார் அந்த மனிதர்.

" நீங்கள் என் கால்களையே கவனித்தீர்கள்" என்று பதிலளித்தான் மன்னன். " நான் உன் கால்களையே கவனித்ததால் உன் நீண்ட நாள் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் என்கிறாய். இனிமேல் நீயே உன்னைக் கவனி. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது உனக்கே தெரியவரும்." மன்னனின் இருண்ட மனதில் ஓர் ஒளிக்கீற்று தெரியத் தொடங்கியது. மிகுந்த பணிவோடு, "நீங்கள் யார்?" என்று கேட்டான் மன்னன். "புத்தர்" என்று பதில் வந்தது.

மன்னன் அவர் காலில் விழுந்து வணங்கினான். தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை என்பதை அறிந்த மன்னனின் தேர் இப்போது அரண்மனை நோக்கி ஓடத் தொடங்கியது.

ஞானம்.


ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் . அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்
கொண்டான் . இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே
சிறந்தவனாகத் திகழ்ந்தான் . ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் , கவனமும் செலுத்தினார்.

சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான்.

ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை
மறைக்கும் அகம்பாவத்தில் அவரையே கூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார்.

மறுநாள் அவனை அழைத்தார். "மகனே ! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் . பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் " என்றார் .

கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்தி விட்டன. ''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான். ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார். அவனும் ஆசிரியர் சொன்னபடியே " அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி சூடாகி விட்டார்.

"ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா ? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா ? " என்றார். இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது " அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான்.

ஆசாரி "அடேய் அறிவு கெட்ட வனே ! என்னதான் படிச்சிருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார்.

எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. "மனித அறிவு இவ்வளவுதானா? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் ? " அவமானம் பொங்கியது . கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான் . ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி அடிச்சாச்சா " .

அவன் பதில் சொன்னான். "அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு ".

ஆசிரியர் சொன்னார்: செல்லமே ! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து மனத்தாழ்மையாய் நடப்பதே உண்மையான ஞானம்...

தர்மத்தைக் கைவிடக் கூடாது .


ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டுபோயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு! இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று. சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன். வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது. அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!

அதற்கு கரடி சொன்னது: எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்

பசியோ...தேவையோ.....


ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான். அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்துகொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார். உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம் ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.
அதற்குக் காவலாளி *"பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான்.* உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே
என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.

ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க
வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.