Sunday, 27 December 2015

பால் கதை


கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம்..! தாங்க முடியல சாமி..! எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்..? என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. இந்த கதை அதற்கு விடையளிக்கக் கூடும்.

பால் கதை..!
பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள்.நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்துby என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை.திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள். அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.
என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன். அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள். பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன். ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் ஆறு ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் பதினாறு ரூபா விலை சொல்றான்” என்றாள்.
ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் ஆறு ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு பதினாறு ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.
இந்தக் கதை, நமக்கு சொல்ற பாடம் என்ன?
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகின்ற அம்சங்கள்..!



Sunday, 13 December 2015

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை. காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.
அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது. ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது. இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது. கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது. விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள்சென்று மறைந்தது.
வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும். நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும்............. “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம். 
நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன? எல்லாத்தையும் உதறிட்டு, நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.