Tuesday, 4 October 2016

மரத்தின் பாசம்.

அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது. அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான். மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான். மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது. அதற்கு அவன் சொன்னான், இல்லை எனக்கு இப்பொது வயதாகி விட்டது, எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை என்றான். மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது. அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்போது மரம் அவனிடம் இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து என்னை பார்த்து செல் என்றது. அவனும் வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. அதற்கு பின் பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான். மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. அவன் சொன்னான் என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான். மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. அவன் அடி மரத்தை வெட்டும் போது மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது. ஆனால் பல வருடங்கள் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான். அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது. இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை கிளைகள் இல்லை அடி மரமும் இல்லை உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருந்தியது. அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான். அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.

இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான்.

Sunday, 2 October 2016

நண்பனா? எதிரியா? முடிவு செய்


அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான். வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது. ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின. இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி. வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.
இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு. விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”
பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.
தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான். குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள். தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான். தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன். ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.
மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான். பிரச்சனை தான் வேறு வேறு. நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது. ஆடுகள் முக்கியம் தான். ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா.......???