Wednesday, 29 August 2018

இயற்கை பூச்சி விரட்டி


கொல்ல வேண்டாம்...இயற்கை பொருட்களை வைத்து ஓட.. ஓட.. விரட்டலாம்!!!



எலி :

எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது..எனவே, புதினாவை அது வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெய்யை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்...



பல்லி :

வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள்.. அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்..



ஈ :

துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள்... இல்லாவிட்டால், லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள்..



கொசுக்கள் :

கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலையை பயன்படுத்தலாம்... கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.. எனவே, உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள்.. அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்..



கரப்பான் பூச்சி :

கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம்.. அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில்கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்..



மூட்டைப்பூச்சி :

மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், அதன் வாசனையில் மூட்டைப்பூச்சிகள்அழிந்து விடும்..



*இயற்கை பூச்சி விரட்டி:*

விவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படிதயாரிப்பது என்று பார்ப்போம்.


வேம்பு, ஊமத்தை, எருக்கு, புங்கன், நொச்சி ஆகியவற்றின் இலைகளை தலா 5 கிலோ வீதம் சேகரித்து, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, 10 லிட்டர் கோமியத்தில் 3 நாட்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். காற்றோட்டமான இடத்தில் நன்றாக கலக்கி நிழலில் மூடி வைக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும். இதில் ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம். இலைகள் நொதித்து அதில் இருந்து கிளம்பும் வேதிப்பொருள் மூலம் பூச்சிகள் விரட்டப்படும். அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். முதலீடு தேவையில்லை. மண்ணில் நச்சுத்தன்மை தங்குவதில்லை. இதன்மூலம் இயற்கையாகவே பூச்சிகளை விரட்டலாம்.

உண்டியல்


முன்பெல்லாம் வீட்டுக்கு வரும் பெரியவர்கள் பலகாரம், பழங்கள் வாங்கி வந்திருந்தாலும்போகும்போது, குழந்தைகள் கையில் காசு கொடுத்துவிட்டுச் செல்வார்கள். பிள்ளைகளும் ஓடிப் போய் அம்மா கையில் அந்தக் காசைக் கொடுப்பார்கள். அம்மா ஆளுக்கோர் உண்டியல் வைத்திருப்பார்.அவரவர் கொடுக்கும் காசை அவரவர் உண்டியலில் போட்டு வைப்பார். அவ்வப்போது உண்டியலை எடுத்து, எடுத்துப் பார்த்து நிறைந்திருக்குமா எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்க்கும் அலாதி சுகம் பிள்ளைகளுக்குக்கிடைக்கும். அந்தச் சுகத்தைப் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவாவதுஉண்டியல் வாங்கிக் கொடுங்கள்.

உண்டியல். நாமே சின்னச் சின்ன வெற்றிகளுக்குப் பரிசு கொடுக்க நினைத்தால் பணமாகக் கொடுக்கலாம். அப்போதுதான் பிள்ளைகளின் உண்டியல் நிறையும். ஓர் இலக்கு வைத்துக்கொள்ளச்சொல்லுங்கள். அந்த இலக்கை அடைந்ததும் உண்டியலைத் திறந்து, பணத்தை எண்ணிப்பார்க்கச் சொல்லுங்கள். அதோடு நீங்கள் கொஞ்சம் காசு போட்டு, ஆசைப்படும் பொருளை வாங்கிக் கொடுங்கள்.

தங்கள் உழைப்பில் கிடைத்த பொருள் என்ற சந்தோஷம் ஒரு பக்கம், ஒரு பொருள் வேண்டுமென்றால் அதற்காகக் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்ற யதார்த்தம் மறுபக்கம் என்று வாழ்க்கையைப் பிள்ளைகள் கற்றுக்கொள்ள இந்த உண்டியல் கைகொடுக்கும்.

இனி எந்த வீட்டுக்குச் சென்றாலும் திரும்பி வரும்போது, அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் பணம் கொடுத்துவிட்டு வாருங்கள். அவர்களுடைய சேமிக்கும் பழக்கத்தைத் தூண்டிவிடுங்கள். சேமிப்பவர்களாக இருந்தால் ஊக்கு வியுங்கள். பரிசு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது உண்டியல் வாங்கிக் கொடுங்கள்.

சுழன்றிடும் வெற்றி :


4 வயதில், உறங்கும் போது அறியாமல் உடையில் சிறுநீரை கழிக்காமல் இருந்தால், அது வெற்றி !



8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !

25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !

50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !

80 வயதில், மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

85 வயதில், உறங்கும் போது அறியாமல் உடையில் சிறுநீரை கழிக்காமல் இருந்தால், அது வெற்றி !

இப்படி சுழன்றுகொண்டேயிருக்கும் நிலையற்ற தன்மையுடைய வெற்றியை மட்டுமே துரத்திக்கொண்டு அறியாமையில் வாழ்தலைக்காட்டிலும், எல்லோருக்கும் நன்மையே நினைத்து, அனைவரும் சமமென எண்ணி, அந்தந்த வயதில் செய்ய வேண்டிய கடமைகளை யாருக்கும் துன்பமளிக்காமல்செய்து, மகிழ்ந்து கடந்து வாழ்தலே அர்த்தம் நிறைந்த வாழ்க்கை !!!

சுய மரியாதை.

கணவனுக்கும் மனைவிக்கும் சிறிய தகராறு. தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர்.


ஒரு நாள் கணவன் தொழில் விசயமாக அதிகாலை 5மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது. மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை. அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடுவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான். காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7. பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான். ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான். மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள். அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள் ” மணி 5 ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று!



இந்த கதையில் சுய மரியாதையை காப்பாற்ற வேண்டி சீட்டில் எழுதி வைத்த கணவன், காலை தாமதமாக எழுந்தவுடன் கோபத்தில் சுய மரியாதையை மறந்து ஏன் என்னை எழுப்பி விடவில்லை என்று கேட்கிறார். முதல் நாள் இரவு கொஞ்சம் தனது சுய மரியாதையை மறந்து மனைவியிடம் எழுப்பிவிட சொல்லி இருந்தால் பயணம் தடைபட்டு இருக்காது.



இதே தவறைத்தான் இன்று நம்மில் பலரும் செய்து கொண்டுஇருக்கிறோம். முதலில் சுய மரியாதையை யாரிடம் எங்கே காட்ட வேண்டும் என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மனைவி என்பவள் உன்னில் ஒரு பாதி உன் உயிரில் ஒரு பாதி உன் உடலில் ஒரு பாதி அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோ வை மறக்க பழகுங்கள். இது ஆண்களுக்கு மட்டுமல்ல , பெண்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது இருவருமே தான் .

வாட்ஸ்அப் வரலாறு!


ஒரு தொழில்முனைவோராக மட்டுமல்ல வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் எவரும் ஒருமுறை வாட்ஸ்அப்பின் கதையை படித்துவிடுவது நல்லது. அதில் அத்தனை பாடங்கள் உள்ளன. 2007ஆம் ஆண்டில் யாகூவில் இருந்து இரண்டு இளைஞர்கள் விலகுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் தென்பகுதியை நோக்கி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள். பிரையன் அக்டன் (Brian Acton) , ஜான் கோம் (Jan Koum) என்ற அந்த இளைஞர்கள் அந்தப் பயணத்திற்கு பிறகு ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று பெரிய இலக்கை நோக்கி முயல்கிறார்கள். 2008இன் இறுதியில் அமெரிக்காவில் வைரலாக பரவிக்கொண்டிருந்த ஃபேஸ்புக்கில் வேலைக்கு விண்ணப்பித்தார்கள். நிராக்கரிப்பட்டது என்று பதில் வந்தது. அந்த வருடத்தில் வேறு எந்த வேலைக்கும் முயலவில்லை. அவர்களின் ப்ரோபைலுக்கு நிச்சயம் ஐடி நிறுவனங்கள் வேலை கொடுக்க தயங்கபோவதில்லை. இருந்தபோதும் கிடைத்த வேலைக்கு சென்று வாழ்கையைக் காப்பாற்றிக்கொள்ள துடிக்கவில்லை. என்ன செய்தால் பெரிய வெற்றியாக இருக்க முடியும் என்று ஆராய்ந்தார்கள்.

அந்த சமயத்தில் Iphone அமெரிக்காவின் இளைஞர்களின் நவயுக அடையாளமாக சென்று சேர்ந்திருந்தது. AppStore இல் மற்றவர்களும் ஆப் செய்து வெளியிட திறந்துவிடப்பட்டது. அது அவர்களை கவர்ந்தது. அலெக்ஸ் பிஷ்மேன்(Alex Fishman) என்ற இன்னுமொரு நண்பரையும் அழைத்து ஆலோசிக்கிறார்கள். மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க ஒரு மொபைல் ஆப் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதற்கு ஐபோன் டெவலப்பர் ஒருவர் வேண்டும். இவர்கள் சர்வர் உள்ளிட்ட பின்புல தொழில்நுட்பத்தில் வல்லவர்கள். பிஷ்மேன் ஒரு ரஷ்யாவை சேர்ந்த மொபைல் ஆப் தொழில்நுட்ப வல்லுனரை கண்டுபிடிக்கிறார். எல்லாம் தயார். பிறகென்ன ஜான்கோம் தன்கையில் இருந்த சேமிப்பை வைத்து வாட்ஸ்அப் என்று பெயர் வைத்து தங்கள் ஸ்டார்ட்அப்பை பதிவு செய்கிறார்.

நினைத்ததுபோலவே நடந்துவிட்டால் வாழ்வில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? இவர்களது ஆப் எக்கச்சக்க பிழைகளை கொண்டு அடிக்கடி நின்று விட்டு செமையா கடுப்பேற்றும். ஒருகட்டத்தில் இதை நிறுத்தி விட்டு மீண்டும் வேலைக்கே சென்றுவிடலாமா என்று ஜான்கோம் நினைத்ததுண்டு. ஆனால் நண்பர் ப்ரையன் அக்டன் “இரு... அவசரப்படாதே. இன்னும் சில மாதங்கள் பல்லை கடித்துக்கொண்டு பொறுத்திருப்போம். நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்” என்றாராம். இது தான் எல்லா ஸ்டார்ட்அப்பிலும் பொதுவாக நடக்ககூடியது. சிலர் மீண்டும் வேலைக்கு திரும்பி இருக்கிறார்கள். சிலர் தங்களது கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டு வந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஆப்பிள் ப்ளேஸ்டோரில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்துகிறார்கள். அதுதான் Push Notification. உங்கள் வாட்ஸ்அப்புக்கு அல்லது மெயில் ஐடிக்கு ஒரு மெசேஜ் வந்தால் டொயிங் என்ற சத்தத்துடன் ஒரு சின்ன ஐகான் வருமே அதுதான். உடனே அந்த நுட்பத்தை தங்கள் ஆப்பில் கொண்டுவருகிறார்கள். வாட்ஸ்அப்2.0 இந்த வசதியுடன் கூடிய மெசேஜ் ஆப்பாக வருகிறது. வெளியிட்ட சில நாட்களில் 250000 பயனர்கள் பயன்படுத்த தொடங்க வேகம் எடுத்தது வாட்ஸ்ஆப். ஆக்டன் தனது யாகூ நண்பர்களின் துணை கொண்டு 250,000$ டாலர் முதலீட்டை திரட்டுகிறார். இன்னும் சிலரை வேலைக்கு எடுக்கிறார்கள். ப்ளாக்பெர்ரி போனுக்கும் இந்த ஆப்பை கொண்டுவருகிறார்கள். நிறையபேர் உள்ளே வந்து லோடு அதிகமாகி சர்வர் பழுதாகாமல் இருக்க இலவச ஆப்பாக இருந்ததை கட்டணமாக மாற்றுகிறார்கள். அப்படி இருந்தும் பயனர்களின் வரத்து குறையவில்லை. 2011 ஆண்டுவாக்கில் ஆப்பிள் ப்ளேஸ்டோரில் Top 20க்குள் வருகிறது. 

இப்போது முதலீட்டளார்களின் கவனம் படுகிறது. கம்பெனியின் 15 சதவீத பங்கிற்கு 8 மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்கிறது. இன்னும் சிலரை வேலைக்கு எடுத்து மற்ற ஆண்டிராய்ட், நோக்கியா சிம்பியன் உள்ளிட்ட பிற மொபைல் செயலிகளுக்கும் வாட்ஸ்அப் வெளிவருகிறது. அந்த ஒரு வருடத்தில் மட்டும் இருபது கோடி பயனர்கள் உள்ளே வருகிறார்கள். ஏற்கனவே முதலீடு செய்த செக்குயா கேபிட்டல் இன்னும் 50 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவே மீண்டும் இலவச சேவையாக மாற்றுகிறார்கள். போட்டோ, வீடியோக்களை ஷேர் செய்யும் வசதி வர, ஒரு பெரும் கூட்டம் வெற்றிவேல், வீரவேல் என்று களம் இறங்குகிறது. வேற யாரு? எல்லாம் நம்ம இந்திய மக்களே. உலகிலேயே வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்தும் தேசம் இந்தியா தான். இருபது கோடியில் இருந்து அறுபது கோடி பயனாளர்களுக்கு ஒரு பெரிய ஜம்ப் இந்தியர்களின் புண்ணியத்தில்.அடுத்த முதலீட்டு சுற்றுக்கு வாட்ஸ்அப் தயாரானது.



இதற்கு மேல் இவர்களை விட்டுவைத்தால் நம்மை காலி செய்துவிடுவார்கள் என்று ஒரு நிறுவனம் யோசித்தது. அது தான் பேஸ்புக். மொத்தமாக நிறுவனத்தை வாங்க விலை பேசியது. 19.3 பில்லியன்களுக்கு ஒத்துக்கொண்டது வாட்ஸ்அப். உலகிலேயே மிக அதிகமாக விலைக்கு விற்கப்பட்ட ஸ்டார்ட்அப் என்ற பெயரை பெற்றது வாட்ஸ்அப். சும்மாவா.. கிட்டத்தட்ட 1,20,000 கோடிகள். காரணம் வாட்ஸ்அப் நாளையே ஒரு சமூகவலை தளத்தை கொண்டுவந்தால் பேஸ்புக் தான் முதலில் அடிவாங்கும் என்ற சூழல் அப்போது. பேஸ்புக் இவற்றை மொத்த பணமாக கொடுக்க முடியாது என்பதால் நான்கு பில்லியன்களுக்கு பணமாகவும், மீதியை பேஸ்புக்கின் ஷேராகவும் கொடுத்தது, ஆறு வருடங்களுக்கு முன் பேஸ்புக் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கு. 

ஸ்டார்ட்அப் பாடம் :

நிராகரிப்பு என்பது இழப்பு அல்ல வாய்ப்பு. நிராகரிக்கப்பட்டவுடன் தலைகுனிந்து கீழே பார்ப்பதுதான் இழப்பு. மேலே பார்த்தால் அங்கே ஒரு அருமையான வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. 

அதேபோல ஸ்டார்ட்அப் முயற்சியில் நினைத்தது நினைத்ததுபோல நடக்கவில்லை என்றால் தோல்வி அல்ல. அதைவிட இன்னும் சிறப்பாக நினை என்று உங்கள் ஸ்டார்ட்அப் சொல்கிறது என்று யோசியுங்கள். பிராமாண்டமான வெற்றி அங்கு தான் கிடைக்கும். 
 

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .


கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ :


மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .


சரி நீரூற்று இருக்கும், ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . .கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

நாம் ஏன் வரி கட்ட வேண்டும்? அரசுக்கு ஏன் வரி தேவைப்படுகிறது?


வரிகள், எப்படி, அரசுக்கு மட்டுமல்ல, அதைச் செலுத்தும் குடிமகனுக்கும் பயன்தரக்கூடிய அத்தியாவசியமான ஒன்று என்பதை, பாமர மொழியில் அலசும் கட்டுரை.

ஒரு அரசாங்கத்துக்கு நாட்டை நிர்வகிக்க தங்கம் தேவை.! ஆனால், தங்கத்தை சந்தையில் அள்ளிவிட முடியாது என்பதால், அதற்க்கு சம மதிப்பு உள்ள ரூபாய் நோட்டுக்கள்! அவ்வளவே அடிப்படை!

இந்த ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.! எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.! ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்... என்ன,... அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும். சரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் - அமெரிக்காவையும் இந்தியாவையும்! அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,... நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக் கொண்டு பழகியுள்ளோம்!

கணக்கிடுவதற்காக, சில கற்பனை உதாரண மதிப்புக்களை / எண்களை எடுத்துக்கொள்வோம்:

துவக்கத்தில், அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் சமமாக, 1 கிலோ (1000 கிராம்) தங்கம், கையிருப்புள்ளதாக வைத்துக் கொள்வோம். அமெரிக்கா, மொத்தம் ஆயிரம் டாலர் மதிப்புக்கு, 1 டாலர் நோட்டுக்கள் 1000 அச்சடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது (தங்கம் இருப்பைக் கணக்கில் கொண்டால்), 1 கிராம் தங்கம் 1 டாலருக்கு சமம்! சரியா! இந்தியாவும், அதே போல், ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு இணையாக 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது.! அதாவது ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு ரூபாய் மதிப்பு!

இப்பொழுது பார்த்தீர்களானால், ஒரு அமெரிக்க டாலரும் கூட, ஒரு இந்திய ரூபாய்க்கு சரி நிகர் மதிப்பே! ஒரு அமெரிக்க டாலர் = ஒரு இந்திய ரூபாய் மட்டுமே!

இப்பொழுது,அமெரிக்க அரசாங்கம் ஆயிரம் ஒரு டாலர் நோட்டுக்களை புழக்கத்தில் இறக்கி, அதிலிருந்து, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20 சதவீதம் வரியாக இலக்கு வைக்கிறது. அதன் மூலமாக, 200 டாலர்கள் வரியாக திரும்பப் பெறுகிறது. இந்த 200 டாலர்களை வைத்து, இன்னமும் ஒரு 200 கிராம்கள் தங்கத்தை வாங்கி, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 200 ஒரு டாலர் நோட்டுக்களை அச்சடித்து, புழக்கத்தில் விடுகிறது! ஆக மொத்தம், தற்போது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன! ஆயினும், ஒரு கிராம் தங்கம் = ஒரு டாலர் மட்டுமே! இந்த பொருளாதாரம், இதே போன்று விரிவடைந்து, மேலும் தங்கம்-மேலும் டாலர் நோட்டுக்கள், என, எவ்வளவு வளரும் பொழுதும், ஒரு கிராம் தங்கம் ஒரு டாலருக்கு நிகராகவே இருக்கும் - இலக்கு வைத்த வரிவிகிதம் முழுமையாக வசூலாகும்வரை!.

இப்பொழுது, இந்தியாவுக்கு வருவோம்.!

இந்திய அரசும் அமெரிக்கா போலவே 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, அதிலிருந்து 20% வரியாக வசூலாக இலக்கு வைக்கும். ஆனால், அசல் வரிவசூலோ,.. வெறும் 50 ரூபாய்கள் மட்டுமே (என்று வைத்துக்கொள்வோம்!).!! அதாவது, புழக்கத்தில் விட்ட 1000 ரூபாய்களில், வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை செய்யப்பட்டது! மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த விருப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது! இதுதான் கருப்புப்பணம்.!

இந்த 750 ரூபாய்கள், சந்தையில் புழக்கத்தில் இருந்தாலும் கூட, இது அரசின் வரவு செலவுக் கணக்குகளில் பதிவாவதில்லை.! ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட!).! இந்த கணக்கில் வராத 750 ரூபாய்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைதான், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, இணைப் பொருளாதாரம் என்பது!

சரி. இப்பொழுது, அரசு, தனக்கு கிடைத்த வரிப்பணம் 50 ரூபாய்களை வைத்து, மேலும் ஒரு 50 கிராம் தங்கம் மட்டுமே வாங்கி கையிருப்பை உயர்த்த முடியும்! தவிர, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும்! இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இந்திய ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே! (ரூ.250 + ரூ.50). ஆனால், அசலாக அரசு அச்சடித்து வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து, மொத்தம் 1050 ரூபாய்கள் கணக்கில் இருந்திருக்க வேண்டும்!

எது எப்படி இருந்தாலும், அரசு, மேலும் நோட்டுக்களை அச்சடித்து சந்தையில் வெளியிட்டே ஆகவேண்டும் - காரணம், ஏற்கெனவே வெளியிட்ட 750 ரூபாய்கள் அதிகாரபூர்வமாக கணக்கில் வராமல் "காணாமல் போய்விட்டதல்லவா"? எனவே, அரசு அந்த விடுபட்ட 750 ரூபாய்களை அச்சடித்து வெளிவிட முடிவெடுக்கிறது!

இப்பொழுது வருகிறார் கண்கொத்திப்பாம்பு IMF ! "நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது.! உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடியும்!" என்கிறார் அவர்! ஆனால், இந்திய அரசோ, நோட்டு அச்சடித்தே தீரவேண்டும் என்று ஆடம் பிடிக்கும் பொழுது, IMF சொல்லும்: "உன் ரூபாயின் மதிப்பை, நிகராக நீயே குறைத்துவிட்டு, மேலும் நோட்டுக்களை அச்சடித்துக்கொள்!", என்று! அரசுக்கு வேறு வழி கிடையாது! காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை! அதனால், மேலும் (அமெரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை! அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இந்திய அரசு! இப்பொழுது, மொத்தம் 1800 ரூபாய்கள் அச்சடித்து புழக்கத்தில் உள்ளது 1000 + 50 + 750) - ஆனால், அரசின் வசம், வெறும் 1050 கிராம் தங்கம் மட்டுமே கையிருப்பு உள்ளது!

ஆக,.. இப்பொழுது, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.1 இல் இருந்து, ரூ.1.71 என ஆகி விட்டது! (1800 ஐ 1050ஆல் வகுத்தால் = 1.71) அதாவது, மேற்சொன்ன அமெரிக்க டாலரை ஒப்பிடும் பொழுது, 1 டாலருக்கு சமமாக இருந்த இந்திய ரூபாய், இப்பொழுது ரூ.1.71 என வீழ்ச்சி அடைந்துவிட்டது! $1 = Rs.1.71 ! இதேபோல், நோட்டுக்களை, சந்தைத் தேவைக்கு ஏற்றாற்போல் அடித்து வெளிவிட வெளிவிட, ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது! ஆனால், கையிருப்பு தங்கம் மட்டும், வெளிவந்த நோட்டுக்களுக்கு சமமாக கூடுவதே இல்லை!


இதனால்தான், ... இன்று, ஒரு அமெரிக்க டாலர் = Rs. 67.80 என வந்து நிற்கிறது!


இந்திய அரசும் 100 % இலக்கு வைத்த வரிகளை வசூலித்திருக்குமானால், நம் இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு கேவலமாக சரிந்திருக்கவே சரிந்திருக்காது! இப்பொழுது, உங்களுக்கு வரிகளின் முக்கியத்துவமும், பொதுமக்களுக்கு அதனால் (மறைமுகமாக) கிடைக்கும் பலன்களும் ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்! நிலையான வலுவான ரூபாயில், வீடு, நிலம், பொருட்களின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்!இந்த ஒற்றைக் காரணத்தால், அமெரிக்கா, உலகின் மிகப் பணக்கார நாடாக அறியப்படுகிறது! காரணம், அங்கு கிட்டத்தட்ட 95% குடிமக்கள் வரி செலுத்துகின்றனர்!ஆனால், இந்தியாவில்? யாராலாவது, ஊகிக்க முடியுமா?percentage of taxpayers in India என்று கூகிள் செய்து தேடிப்பாருங்கள்! நல்ல இந்தியக் குடிமகன் தலையை வெட்கத்தில் தொங்கவிட்டுக் கொள்வான். ஆம்.! வெறும் 1% க்கும் குறைவானவர்களே இந்தியாவில் வரி செலுத்துபவர்கள்! நாம், நம் நாட்டில் அமெரிக்காவுக்கு இணையான சமூகப் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், சுத்தம், சுகாதாரம், வெட்டில்லாத மின்சாரம், பகல்போல ஒளிமயமான இரவு, உயர்தர வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம்! அங்கு இருக்கும் அவற்றை சிலாகித்து புகழ்ந்து பெருமூச்சு விடுகிறோம். ஆனால்,... அவர்கள் போல, ஒட்டுமொத்த சமூகமாக வரி செலுத்துகிறோமா? கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா? நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா? என்று யோசித்தால்,...

பாசிட்டிவ் எனர்ஜி தரும் புத்தகங்கள்!



"தூக்கமே வரலை... அந்த புத்தகத்தை படிக்க எடுத்தேன். மூணாவது பாராவுலேயே தூங்கிட்டேன்" என்று கிண்டலாகச் சொல்வார்கள் சிலர். ஆனால், உண்மையில் நல்ல புத்தகங்கள் நம்மை தூங்கவிடாது என்பதே எதார்த்தம். பொதுவாக நல்ல புத்தகங்களின் முதல் வரியை படிக்க தொடங்கியதுமே, இரவு முழுதும் விழித்துக்கிடந்து முற்றும் வரை படித்துவிட்டுத்தான் வைக்க முடியும். அந்த அளவுக்கு மனம் அதில் லயித்து ஒரு தவம் போல மாறிவிடும்.

மகாத்மா காந்தி, 'ஜான் ரஸ்கின்' எழுதிய 'அன்ட்டூ திஸ் லாஸ்ட்' என்ற புத்தகமே தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்டது என குறிப்பிட்டுள்ளார். ''அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது வாசித்த நான், அதன் தாக்கத்தால் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைசி மனிதனும் சிறந்த வாய்ப்புக்களைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டுக்கு ஏற்ப எனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே நான் உறுதிசெய்துவிட்டேன்" என்று அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து விளக்கியுள்ளார் காந்தியடிகள்.

காந்தியின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டதைப் போலவே, நம் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு புத்தகத்தின் சில வரிகள் நம்மை செம்மைப்படுத்தி நம் மனதை பாசிட்டிவ் பாதையில் திருப்பிவிட்டிருக்கும். எப்போதுமே விடைதெரியாத பல வாழ்க்கைக் குழப்பங்களுக்கு, ஏதாவது ஒரு புத்தகத்தில்தான் நாம் பதில் தேடிக் கண்டுபிடித்திருப்போம். நல்ல நண்பர்களைப் போலவே, துன்பம் மிகுந்த பொழுதுகளில் நமக்கு துணை நிற்பவை நல்ல புத்தகங்களே. சமூக மாற்றங்களுக்கும், எழுச்சிகளுக்கும் புத்தகங்கள் கூர்மையான ஆயுதமாக பயன்பட்ட வரலாறுகள் இருக்கின்றன.

சீனாவில் அறிவுப்புரட்சிக்கு விதைபோட்ட பல விஷயங்களில், 2000 ஆண்டுகளுக்கு முன் கன்ஃபியூசியஸ் எழுதிய புத்தகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்திய விடுதலை போராட்டத்திலும்கூட ஏராளமான ஏடுகளின் வீச்சு இருந்ததை அறியலாம். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க அறிஞர்களின் நூல்கள் ஒட்டுமொத்த உலகையும் புதிய பாதைக்கு திருப்பிவிட்டிருக்கின்றன. 13-ம் நூற்றாண்டில் மார்க்கோ போலோவால் எழுதப்பட்ட 'பயணங்கள்' என்ற புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவைத் தேடிப் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ், அமெரிக்காவை கண்டுபிடித்தார். கொலம்பஸ் கண்டுபிடித்த அமெரிக்காதான் இன்று உலக நாட்டாமையாக ஜொலிக்கிறது என்றால், புத்தகத்தின் வலிமையை என்னவென்று சொல்வது?

இந்த உலகில் பல்வேறு வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது 'ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப்போவதற்கு முன்பு ஏதேனும் ஒரு நல்ல நூலின் ஒரு பகுதியை படித்துவிட்டுத்தான் படுக்கச் செல்கிறேன்' என்று கூறியுள்ளனர். 'பாசிட்டிவ் எனர்ஜி புத்தகங்களை வாசிக்கும் போது மூளை புத்துணர்வு பெறுகிறது; மன அழுத்தம் குறைகிறது; மனம் ஒரு நிலைப்படுகிறது; தன்னம்பிக்கை வளர்கிறது; கற்பனைத் திறனை உருவாக்குகிறது; நல்ல குணங்களை வளர்க்கிறது' என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.