Sunday, 29 November 2015

Stock Market

ஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்... வெளி நாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவை படுகிறது. நீங்கள் ஒரு பாம்பை பிடித்து தந்தால், 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாய் வீதம் வாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்து விட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. அதனால் மக்களுக்கு அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய் விட்டது. உடனே அந்த பணக்காரர், இனி பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார். அவர்கள்  மீண்டும் உற்சாகமாகி தேடி தேடி பாம்பை பிடித்து கொடுத்தார்கள். ஊரில் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் எல்லாப் பாம்புகளையும் பிடித்து விட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே அரிதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய் விட்டது.
அந்த பணக்காரர் விடவில்லை. இப்போது 50 ரூபாய் தருவதாக அறிவித்தார். உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்து கொடுத்தார்கள். இப்போது பாம்பே இல்லாத நிலையாகி விட்டது. அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை. மேலும்பாம்பு கிடைப்பது அரிதாகி விட்டதால் 200 ரூபாய் தருவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தான் அவசரமாக இன்னொரு தொழில் விஷயமாக மற்றொரு ஊர் செல்ல வேண்டும் என்பதால் ஒரு வாரத்தில் வந்து வாங்கி கொள்கிறேன். அதனால் உங்களால் முடிந்த அளவு பிடித்து கொண்டு வாருங்கள் என்று சொல்லி, நான் வரும் வரைக்கும் என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லி சென்று விட்டார்.
அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டு..."மக்களே இங்கே பாருங்கள் நீங்கள் பிடித்து தந்த அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும் அதற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இல்லை. அதனால் நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.இந்த பாம்புக்களை எல்லாம் நான் உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன். அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது என்று அவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன். அவர் வந்ததும், இதே பாம்பை நீங்கள்அவரிடம் 200 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்" என்று சொன்னார். உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்த பணத்தில் பாம்பை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி குவித்தார்கள். எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளை வருகிறார் அதனால் நான் இன்று போய் விடுகிறேன் என்று சொல்லி கிளம்பி சென்று விட்டார். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை..அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....! இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்புகள் மட்டும்தான்....!


Sunday, 15 November 2015

நான்கு மனைவிகள்

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள். நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான். உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

  • 1.       நான்காவது மனைவி நமது உடம்பு.

நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

  • 2.       மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.

நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

  • 3.        நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.

   அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.  அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

  • 4.        நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.

நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.