ஒரு ஊரில் ஒரு
கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல
ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள்
வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள்
சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு
சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து
பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில்
இருக்கும் ஒரு நோயே காரணம்
என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த
ஒரே ஒரு வழிதான். அந்தப்
பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர
வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
பணக்காரன் முதலில் தன் வீட்டில்
இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது.
சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு
சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.
வெளியே போனால், இயற்கை எல்லா
வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால்,
அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே! நிறையப்
பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான்.
அவன் போகும் வழியில் இருக்கும்
ஆடு, மாடு, மனிதர், குடிசை,
வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும்
பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய
வேலை. அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து
வந்தார்கள். சில மாதம் கழித்து
மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார்.
வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி,
அவர் மீதும் பச்சை வண்ணம்
அடிக்கப் போனார்கள். சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள்
‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று
கூறினார்கள். சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம்
அழைத்துப் போங்கள்”
என்றார். பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய
சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி.
வணங்கி அவரை உபசரித்தான். “இந்த
ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட்
அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.
“ஐயா, நீங்கள் சொன்னபடிதான்
நான் செய்கிறேன்”
என்றான் அவன் மிகப்பணிவோடு. “நான்
என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி. “பச்சைநிறத்தைத்
தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று
கூறினீர்களே ஐயா”
என்றான். “மகனே! நீ லட்ச
லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். ஒரு நூறு ரூபாய்
கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால்,
உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி
இராது. உன்னால் இந்த உலகம்
முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?”
என்று கேட்டார் சன்னியாசி. நம்மில் பலரும் இந்தக்
கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான்
இருக்கிறோம். நம்மைத் திருத்தி அமைத்துக்
கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது
மாற்றியமைத்து விடுவது என்று மிகவும்
முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல. மிகுந்த
காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான்
‘திருந்த வேண்டியது நாம்தான்’
என்பது புரிகிறது.
Monday, 19 October 2015
Sunday, 11 October 2015
இழந்து கொடுங்கள், கொடுத்துப் பெறுங்கள்!!
தொலை
பேசியை எடுத்து பதட்டத்துடன் தனது உற்ற நண்பனிடம் பேச ஆரம்பிக்கிறார், எனது பிள்ளையின்
மருத்துவச் செலவிற்கு மிக அவசரமாக 5000 பணம் தேவை என்கிறார். உடனே அவரது நண்பன் அரை
மணி நேரம் பொறுத்திருங்கள் இதோ நான் வந்து தருகிறேன் என்றான். இரண்டு மணி நேரம் கழிகிறது. அவரைக் காணவில்லை சரி என்னை ஏமாற்றி விட்டான் என
நினைத்து அவனது தொலை பேசி இலக்கத்தை அழுத்துகிறார் போன் ஆப் செய்யப்பட்டிருந்தது.உண்மையிலே
என்னை ஏமாற்றி விட்டான் என்று முடிவெடுத்துக் கொண்டு அவரது தொலை பேசிக்கு ஒரு மெசேஜை
இப்படி அனுப்புகிறார்.
"நீ
என்னை ஏமாற்றியது போதும் நான் இனி உனக்கு போன் பண்ண மாட்டேன், போனை திறந்து நீ விரும்பியவர்களுடன்
பேசு, எனக்குப் பயந்து ஆப் செய்ய வேண்டாம். இது போன்ற நயவஞ்சகத் தனத்தை இனிமேல் யாருக்கும்
செய்ய வேண்டாம் "
இரண்டரை மணி நேரத்திற்குப் பின் அந்த நண்பனிடமிருந்து
இவருக்கு கால் வருகிறது. நண்பன், நான் உங்களுக்கு எங்கு வந்து தர வேண்டும் என்னிடம்
தற்போது நீங்கள் கேட்ட தொகையளவு பணம் இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கையில் மெசேஜ் வரும் ஓசை கேட்கிறது சற்று தாமதியுங்கள்
மெசேஜை பார்த்துவிட்டுப் பேசுகிறேன் என்றான் நண்பன். இவர் அனுப்பிய குறுஞ் செய்தியைப்
பார்த்து கவலையடைந்த நண்பன் கண்ணீருடன் தன்னைப் புரிந்து கொள்ளாத நண்பனிடம் தாமதித்ததற்கு
என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் உண்மையில் நீங்கள் கேட்கும் போது என்னிடம் பணம் இருக்கவில்லை,
எனது நண்பனுக்காக என்னிடமிருந்த ஒரே ஒரு சொத்தான 7000 பெறுமதியான மொபைல் போனை கடையில்
விற்பதற்குச் சென்ற போது போனை அணைத்து விட்டேன் அதனை விற்று கிடைத்த 7000 பணத்தில்
எனக்கு 2000 பெறுமதியான ஒரு தற்காலிக போனை வாங்கித்தான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்
மீதி 5000 நான் எங்கு வந்து உங்களுக்கு ஒப்படைக்க வேண்டும என்றான்.
கண்களில் நீர் ததும்ப அவசரப்பட்டு விட்டோமே என்ற
மனக்குமுறலுடன் பேச வார்த்தையின்றி தடுமாறினான்..
வாழ்க்கையில் சில விடயங்களை பெறுவதற்கு இறைவன் வகுத்திருக்கும் அந்த நேரம் வரும் வரை
நாம் பொறுத்தாக வேண்டும் அவசரப்படுவதனால் நமக்கு கிடைக்க இருக்கும் பெரிய நன்மைகள்
கூட சில வேளை நம்மை விட்டு கை நழுவிப் போகலாம் நட்பில் தூய்மை வேண்டும். அது ஒரு கூட்டு
வணக்கம் என்பதனால் தூய்மையுடன் அர்ப்பணமும்
புரிந்துணர்வும் மிக அவசியம் நல்ல நண்பர்களை நாம் புரிந்து கொள்ளாத பட்சத்தில் நாம் அவர்களை மட்டுமல்ல அவர்களது நட்பண்புகளையும் அவர்களின் மூலம் கிடைக்கும் நற்பயன்களையும்
சேர்த்தே இழக்க நேரிடும், உங்களிடம் இருக்கும் ஒன்றை இழந்தேனும் நல்ல நண்பனுக்குக்
கொடுங்கள் கொடுத்து இறைவனிடம் பன்மடங்கு பெறுங்கள்,
ஒருவரைப் பற்றி முழுமையான அறிவின்றி முந்திக் கொண்டு முடிவெடுக்காதீர்கள் .
Subscribe to:
Posts (Atom)