Sunday, 29 May 2016

தாத்தாவின் பேரன்

             கணவன் ,மனைவி ஒரே ஒரு குழந்தை என்றிருக்கும் அழகான வீட்டிற்கு தந்தை வழி தாத்தா வருகிறார். பேரனுடன் தங்கி இருந்து தன் நாட்களை கழிக்க ஆசைக் கொண்ட அவருக்கு கண்கள் சரியாக தெரியவில்லை. கைகளும் பொருட்களை எடுக்கையில் நடுக்கம் கொள்கிறது. அந்த அளவுக்கு  தாக்கத்துடன் இருக்கிறார். வீட்டில் எல்லாரும் ஒன்றாக மேசையில் அமர்ந்து உணவு உண்கின்றனர். தாத்தா கரண்டியை எடுக்கையில் கீழே தவறி விழுகிறது. பால் குடிக்க கோப்பையை பிடிக்கையில் கை நடுக்கத்தில் பால் மேசை விரிப்பில் சிந்தி விடுகிறது. அவர் உணவு உண்ணும் போதும் உணவும் கீழே சிந்துகிறது. அவரின் இந்த செயல்களைக் கண்டு கணவனும் மனைவியும் எரிச்சல் அடைகின்றனர். தொடர்ந்து தாத்தாவை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்கள் மேசையில் அமர வைக்காமல் ஓரமாய் அவருக்கென்று ஒரு தனி மேசையில் சாப்பிட வைத்தனர். அவர் சாப்பிடும் பாத்திரம் கீழே விழுந்து உடையாமல் இருக்க மரத்தால் ஆன பாத்திரங்களில் உணவு கொடுக்கப்பட்டது.
நடக்கும் அத்தனை விடயங்களையும் பேரன் அமைதியாய் பார்த்துக் கொண்டே இருக்கிறான். எல்லாரும் ஒன்றாக அமர்ந்துச் சாப்பிட தாத்தா மட்டும் தனி மேசையில் சாப்பிடுகிறார். ஒதுக்கப்பட்டு விட்டோம் என்ற ஏக்கம் அவர் கண்களில் தெரிகிறது. மகன் மற்றும் பேரனை அடிக்கடி திரும்பி பார்த்த படியே சாப்பிடுகிறார். ஒரு நாள் அந்த வீட்டு குழந்தை( தாத்தாவின் பேரன்) மரத் துண்டுகளை வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை பார்த்த தந்தை மகனிடம் அன்பாய் கேட்கிறார், " குட்டி என்ன விளையாடுறிங்க?" என்று. குழந்தை சொல்கிறது " நான் இந்த மரத்துண்டுகளை வைத்து 2 பாத்திரங்கள் செய்கிறேன் பா .நான் பெரியவன் ஆனதும் உங்களுக்கும் அம்மாவுக்கும் சாப்பிட கொடுக்க வேண்டுமல்ல அதற்குத் தான்" என்று. தந்தையால் பேச முடியவில்லை. கண்கள் கண்ணீரில் ததும்பியது. தான் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது.குற்ற உணர்ச்சி அவரை கொன்றது. மறுநாளிலிருந்து , தாத்தாவுக்கும் அவர்கள் அமரும் மேசையிலே உணவு பரிமாறப் பற்றது .பக்கத்திலேயே நின்று தாத்தா சாப்பிடும் வரை அவரை கவனித்துக் கொண்டார்கள்.கரண்டிகள் கீழே விழுந்ததும் எடுத்து வைத்துவிட்டு புன்னைகைத்தார்கள். பால் சிந்தியதும் மேசை விரிப்பை மாற்றிவிட்டார்கள்.
நீதி: குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பது தவறு. நம்மை விட அவர்கள் பார்வை கூர்மையானது.அவர்கள் கண்கள் பார்க்கும் ஒவ்வொரு செயலுக்கும் மனதில் ஒரு தகவல் பதிவிக்கப்படுகிறது. இதை நினைவில் கொண்டு உங்கள் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள்.

Sunday, 15 May 2016

விருப்பம்

‎அர்ஜுனன் ஒருநாள் ‪‎கிருஷ்ணரிடம் கேட்டான், “தருமரை விட ‪கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்? இரண்டு பேருமே எதையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர்கள்தானே...? கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் ?”

சரி, என்னுடன் வா, காட்டுகிறேன் என்று கூறி அர்ஜுனனை அழைத்துச் சென்றார் கிருஷ்ணன். இருவரும் பிராமணர்களைப் போல வேடமிட்டுக்கொண்டு தருமரின் அவைக்குச் சென்றார்கள். யாகம் நடத்த சந்தனக் கட்டைகள் வேண்டும் என்றார்கள். மன்னர் தருமர் உடனே சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை நாடு முழுவதும் அனுப்பினார். ஆனால் அப்போது மழைக்காலம். கொண்டு வந்த மரங்கள் எல்லாம் ஈரமாகி இருந்தன. அவற்றைக்கொண்டு யாகம் நடத்த முடியாது.

இருவரும் கர்ணனிடம் சென்று அதே கோரிக்கையை வைத்தார்கள். கர்ணன் யோசித்தான். “அடாடா... இது மழைக்காலம். இந்த மழைக்காலத்தில் காய்ந்த கட்டைகள் கிடைக்காது. அதனால் என்ன... கொஞ்சம் பொறுங்கள்” என்றான். கோடரியை எடுத்து வந்தான். மாளிகையின் கதவுகளும் சன்னல்களும் சந்தன மரத்தால் செய்யப்பட்டவை. கர்ணன் அவற்றை வெட்டி எடுத்துக் கொடுத்தான்.

இருவரும் திரும்பி வரும்போது கிருஷ்ணர் கேட்டார்.“இப்போது புரிகிறதா அர்ஜுனா... தருமரிடம் கதவையும் ஜன்னல்களையும் உடைத்துத் தாருங்கள் என்று கேட்டிருந்தால் அவரும் உடனே தந்திருப்பார்தான். ஆனா் அவர் தானாகவே அவ்வாறு சிந்திக்கவில்லை. ஆனால் கர்ணன்...நாம் கேட்கவே இல்லை. அவனாகவே யோசித்துச் செய்தான்.

யுதிஷ்டிரர் கொடுப்பது அது அவருடைய தர்மம் என்பதால்.கர்ணன் கொடுப்பது கொடையே அவனுடைய விருப்பம் என்பதால். எந்த வேலையையும் விருப்பத்துடன் செய்தால் அது போற்றப்படும் செயலாகும்”

இதிலிருந்து தெரிவது என்ன?

கடமைக்காகவோ, நிர்ப்பந்தமோ, தேவையோ, எதுவாக இருந்தாலும் செய்வதை விருப்பத்துடன் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்..