Tuesday, 21 April 2020

சம்பள உயர்வு.


ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது. மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது.

அதற்கு வியாபாரி, “மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்துக் கொண்டது. புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான். கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது. அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது. மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது.

மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான். “எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது. வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை. உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான். வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. “எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்ததாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.

அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்” என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது.


நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் ......

வசதி



அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது.. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக் கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி கேட்டது. “எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை. இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்ன வர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது. முடிவாக, அதோ.... கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது. வந்து விட்டோம்..... வந்தே விட்டோம்...... இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம். குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால், இதென்ன.... ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக் கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது. மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது. குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.

“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள் வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக் கிறோம். குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம். கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."💐

!!**வாழ்க்கையின் உண்மை**!!



ஞானி ஒருவர் கோயில் ஒன்றில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இடையே நகைச்சுவை ஒன்றைச் சொன்னார். கூட்டத்தில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதே நகைச்சுவையை மறுபடியும் சொன்னார். இம்முறை கொஞ்சம் பேர் மட்டும் சிரித்தனர். அதே நகைச்சுவையை இடையிடையே சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் யாருமே சிரிக்காமல் அமைதியாய் இருந்தனர். ஞானி சொன்னார், திரும்பத் திரும்ப கேட்ட ஒரு நகைச்சுவைக்கே சிரிக்க முடியாத உங்களால், என்றோ நடந்து முடிந்த துயர சம்பவங்களை மட்டும் நினைத்து, எப்படி திரும்பத் திரும்ப அழ முடிகிறது ? ஒரே விஷயத்திற்காக எப்படிப் பல காலம் பகையும் வன்மமும் கொள்ள முடிகிறது?

"அந்த இடமே ஆழ்ந்த அமைதியானது"..


மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!


ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள் , அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை.

வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். "பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார். வெளியில் நின்றிருந்த தன் காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் தன் மகன் கீரிய அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்

” ஐ லவ் யூ அப்பா”.

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்?

பெண்.


ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்*.

ஒரு நாள், இரு நாள் அல்ல, தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்.இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள்,
ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும், கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.

ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள். ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது, …… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.

கோபத்தின் கதை!


ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.

”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.

முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம்ம்🏼 கூறினான்.இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்ன்🏽.உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்?

உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா?

இது தான் உலகம்!


ஒரு பள்ளி ஆசிரியை கரும்பலகையில் கீழ் கண்டவாறு எழுதினார்

9×1=7
9×2=18
9×3=27
9×4=36
9×5=45
9×6=54
9×7=63
9×8=72
9×9=81
9×10=90

இதை எழுதி முடித்தவுடன், மாணவர்கள் அனைவரும் சிரித்து கேலி செய்தனர். காரணம் கேட்ட போது, ஆசிரியை எழுதிய முதல் வாக்கியம் தவறு என்று சொன்னார்கள்.

ஆசிரியை மாணவர்களை நோக்கி உண்மைதான், அது தவறுதான் ஆனாலும் ஒரு காரணத்திற்காக நான் அப்படி செய்தேன், ஏனெனில் நான் மற்ற வாக்கியங்கள் எல்லாம் எழுதியிருந்தாலும் அதற்காக நீங்கள் என்னை பாராட்டவில்லை ஒரு தவறான செயலுக்கு கேலி செய்கிறீர்கள் அல்லவா இது தான் உலகம். நீங்கள் நல்லது எவ்வளவு செய்தாலும் ஒரு தவறில் எல்லாம் முடிந்துவிடும்.
ஆக நல்லது செய்வது முக்கியம் என்றால் தவறு செய்யாமல் நல்லது செய்வது அதைவிட முக்கியம்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜