குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில்
இருந்தே தொடங்க வேண்டும்... சரி, எந்த இடத்தில்
இருந்து தொடங்குவது?
முக்கியமான 5 கட்டளைகள்:
*மார்பகம்,
பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம்,
உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல்,
குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக
உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல்
அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள். அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு
பதில் அளிக்க வேண்டியது இல்லை.
அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில்
சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல
அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப்
பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண்
குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண்
குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும்.
இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு
ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப்
பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும்
பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி
அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள்.
*வீட்டில்
அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். கணவன்
- மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள். குழந்தையின்
முன் உடை மாற்றாதீர்கள். ஆபாசம்
வரும் எனத் தெரிந்தால், டிவியோ,
பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள்.
*பாலியல்
கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான்
தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண்
பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில்
நிலவாத சூழலை உருவாக்குங்கள்.சமையலில்
தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும்
கணவன் - மனைவி இருவருக்கும் சமமான
பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண்
குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள்;
பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும்
எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள்.
*சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக
உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு
மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள்பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி
சகஜமாகப் பேசுங்கள். கை, கால்களைப் போல
அதுவும் ஓர் உறுப்புதான் என்று
அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ,
சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத
சூழலை உருவாக்குங்கள்.புத்தக வாசிப்புப் பழக்கத்தை
உருவாக்குங்கள்.நீங்கள் சொல்ல நினைக்கும்
- ஆனால், சொல்ல முடியாதது என்று
நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.
*குழந்தைகள்
எந்த ஒரு சங்கடமான விஷயத்தை
உங்கள் முன் கொண்டுவந்தாலும்‘‘பயப்பட
வேண்டாம், இது ஒரு பிரச்னையே
இல்லை, நான் இருக்கிறேன்’’ என்கிற
பக்கபல வார்த்தைகளோடு அவர்களை அணுகுங்கள்.
அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்!
‘‘அம்மா, என்கூட படிக்குற
ஒரு பையன் என்கிட்ட வந்து
காதலிக்கிறேன்னுசொல்றாம்மா...”
‘‘ஆஹா... அவனுக்கு உன்னைப்
பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க
ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத்
தெரியலை. டி.வி., சினிமாவைப்
பார்த்து காதல்னு சொல்லி இருக்கான்.
தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு
பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து
படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு
வா. விளையாடு!’’
‘‘ஏம்மா, பெண்களுக்கு மட்டும்
மார்பு வளருது... ஆண்களுக்கு வளரலை?”
‘‘பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால்
கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.’’
‘‘பலாத்காரம்னா என்னப்பா?”
‘‘கண்ணா, நம்ம உடம்புல
சில இடங்களை எல்லோரும் தொடலாம்,
சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித்
தொடக் கூடாத இடங்களை நம்மளை
மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.’’
‘‘மாதவிடாய்னா என்னம்மா? அக்காவுக்கு நாப்கின் எதுக்கு வாங்குறீங்க?”
‘‘உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர்
எப்படி உச்சாவா வருதோ, அதேபோல,
பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய
பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே
தேவையில்லாத ரத்தம் வெளியே வரும்.
அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த
ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான்
நாப்கின்.’’
‘‘குழந்தை எப்படிப்பா பிறக்குது?”
‘‘அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும்.
அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற
கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப்
பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா
உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல,
நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு
எல்லாம் புரியும்.’’
அணுகச் சங்கடமான 3 விஷயங்கள்!
குட் டச் / பேட்
டச்
குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன்
உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம்,
எங்கெல்லாம் தொடக் கூடாது என்று
புரியவையுங்கள். கை குலுக்கலாம் - குட்
டச். தலை மேல் கை
வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம்
கொடுக்கலாம், தோளில் கை போடலாம்
- குட் டச். தடவக் கூடாது
- பேட் டச். மார்பில், வயிற்றில்,
இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது;
தடவக் கூடாது. வாய் மீது
வாய் வைத்து முத்தம் கொடுக்கக்
கூடாது. கட்டிப்பிடிக்கச் சொல்லக் கூடாது. மடியில்
அமர்த்திக்கொண்டு அணைக்கக் கூடாது - பேட் டச். அப்படி
யார் செய்தாலும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி,
தனியாக இருக்கும்போது அம்மாவிடம்/அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும்
என்று சொல்லிக்கொடுங்கள் . வீட்டின் அருகிலோ, பள்ளிக்கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள்
யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்களா, சைகை மூலம் அழைக்கிறார்களா,
சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக்
கற்றுக்கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக்
கண்காணியுங்கள்.
காதல்
குழந்தை ஐந்து வயதில்
காதல் வயப்படலாம். இயல்புதான். பதின்பருவத்தில் காதல் வருவதும் இயல்புதான்.
சூசகமாகச் சொல்லுங்கள்... ‘‘வெறும் நட்புதான்பா. ஆனா,
இந்த வயசுல அப்படித்தான் தோணும்,
தப்பில்லை. இப்படித்தான் அப்பாவுக்கும் சின்னப் புள்ளையா இருக்கும்போது
நடந்துச்சு. அப்புறம் பெரியவனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சுச்சு. படிப்பைக் கவனிப்பா. எதுவா இருந்தாலும் அது
முக்கியம்’’
என்பதுபோலப் பேசுங்கள்.
சுய இன்பம்
ஆணோ, பெண்ணோ... ஒரு
குழந்தை தன் வாழ்வில் இரு
முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது. முதல் முறை 3-5 வயதில்.
இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக்
குழந்தைகளுக்கும் சகஜமானது. பிறப்புறுப்பைத்தேய்த்துக்கொண்டே
இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும்
இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில்,
குழந்தையின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால்
தடுக்க முடியும். ஆனால், விவரம் தெரிந்த
பின் பதின்பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல.
அனுமதியுங்கள். அதேசமயம், டி.வி., ஆபாசப்
புத்தகங்கள், இணையம் போன்ற திசை
திருப்பும் விஷயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். விளையாட்டு
உள்ளிட்ட பிற விஷயங்களில் ஊக்குவியுங்கள்.
கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம்
அதிகமானால், அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத்
தெரியப்படுத்துங்கள்.
ஆப்த வாக்கியம்
ஒரு விஷயத்தைக் குழந்தைப்
பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள்.
‘‘நீ மட்டுமே உலகம் இல்லை.
நாம் ஒவ்வொரு நாளும் உயிர்
வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு
தேவைப்படுகிறது. ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும்
நினை’’
என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள். எல்லோருடைய
எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும்
என்பதை உணர்த்தி வளருங்கள். வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள்
அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள்; எதையும்
மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி
வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்!
No comments:
Post a Comment